Mobile – ஐ பாதுகாப்பாக பயன்படுத்த சில வழிகள்
இன்றைய உலகில் நாம் மற்ற பொருட்களை விட நம்முடைய மொபைலையே மிக அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அது நமக்கு பல நேரங்களில் பயன்பாடாக இருக்கிறது. சில நேரங்களில் தேவை இல்லாமலும் கூட இருக்கின்றது. ஆனாலும், நாம் மொபைல் போன் பயன்பாட்டினை குறைப்பதில்லை. காரணம் அவ்வப்பொழுது ஏற்படும் சிறுசிறு முக்கியமான பயன்பாடுகள். சாதாரணமாக புகைப்படங்களை அனுப்புவது தொடங்கி, பரிவர்த்தனைகள் போன்ற பெரிய அளவிலான பணப்பரிமாற்றங்கள் கூட நாம் நமது மொபைலி லேயே முடித்து விடுகின்றோம். அதோடு நிறுத்திவிடாமல் பல நேரங்களில் நாம் பொழுதுபோக்கிற்காகவும், நம்முடைய மொபைலைத்தான் பயன்படுத்துகின்றோம்.
இணைய பிரச்சினைகள்
இவை அனைத்திற்கும் தொடக்கமாக இருப்பது இணையம் என்ற பெருங்கடலே ஆகும். இந்த இணையத்தில் தான் பலபேரினுடைய வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றது. தேவையில்லாத செய்திகள்(SMS) பெறுவது முதல் சில நேரங்களில் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணங்களை பறி கொடுக்கும் அளவிற்கு பெரிய அளவிலான பாதிப்புகளைக் கூட ஏற்படுத்தி விடுகின்றார்கள் இணையத்தில் உள்ள ஹேக்கர்கள். சில நேரங்களில் இவர்கள் விரிக்கும் சைபர் வலையில் பலபேர் தானாகவே சென்று மாட்டிவிடுகின்றார்கள். இதுபோன்ற தேவையற்ற சிக்கல்களிலிருந்து நாம் நம்முடைய மொபைலை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது பற்றிய சில குறிப்புகளை தற்பொழுது காணலாம்.
பாதுகாப்பில்லாத Website-கள் வேண்டாம்:
கூகுளில் நாம் தேடும் செய்திகள் கிடைக்கும் அனைத்து இடங்களும் பாதுகாப்பானவை என்று சொல்லிவிட முடியாது. பல இணையப் பக்கங்களில் நமக்குத் தேவையான டேட்டாக்களோடு, தேவையில்லாத வைரஸ்கள்(VIRUS), மால்வேர்கள்(MALWARES), ஆட்வேர்(ADWARES) போன்ற பலவும் சிதறிக் கிடக்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ download செய்தோமானால், அது நம்முடைய சாதனங்களில் இருந்து தகவல்களை எடுப்பது, தகவல்களை அழிப்பது, திருடுவது போன்ற, நமக்கு பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது. இதனைத் தடுக்க நாம் தேடவேண்டிய வலைப்பக்கத்தை எப்பொழுதும் உறுதிசெய்து, பின்னர் அதில் இருந்து தகவல்களை பெற வேண்டும்.குறிப்பாக Http:// மட்டும் உள்ள இணையதளங்களில் நம்முடைய எந்தத் தகவல்களையும் அளிக்கக்கூடாது. Https:// உள்ள இணைய பக்கங்கள் ஓரளவு பாதுகாப்பானவை.உதாரணமாக தமிழக அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அனைத்தும் இந்த Https:// Protocals கொண்டு மட்டுமே செயல்படுகின்றது.
Browsers-க்கு குறைவான அனுமதி கொடுங்கள் போதும்
உங்களுடைய இணையத் தேடல்களுக்காக பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் (Web Browsers) மைக்(Mic), கேமரா(Camera) GPS(Location) போன்ற தேவையில்லாத அனுமதிகளை ஆப் செய்து விடுங்கள். நாம் நம்முடைய மொபைலில் இணையத்தில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கும்பொழுது, Malwares நிறைந்த ஒரு link-ஐ நாம் தொடும்பொழுது அது நம்மிடம் ஆப் செய்து வைத்துள்ள Camera, Mic போன்ற பயன்பாடுகளை திறக்க சொல்லி அனுமதி கேட்கும். அப்பொழுது நாம் ஆபத்தை உணர்ந்து, நம்முடைய பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள முடியும்.
Unwanted Apps இருந்தா Uninstall செஞ்சிடுங்க
ஒவ்வொரு நாளும் நாம் பல நேரங்களில் நிறைய ஆப்ஸ்களை(apps) பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நமக்கு புதிது புதிதாக ஆப்ஸ்கள் தேவைபட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்காக நாம் என்ன செய்யலாம்? பெரும்பாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிற வலைப்பக்கங்களில் இருந்து கிடைக்கும் ஆப்ஸ்களை பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை அதனை உங்களுடைய மொபைலில் நிறுவ வேண்டாம். அப்படி பிற தளங்களிலிருந்து கிடைக்கும் ஆப்ஸ்கள் உங்களுக்கு கட்டாயம் வேண்டுமெனில், அதனைப் பற்றிய கருத்துக்களை இணையத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடங்களில்(Community Forums) கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அந்த ஆப்ஸ்களை நிறுவுங்கள்.
இலவச WI-FI என்ற பெரிய ஆபத்து
பொது இடங்களில் கிடைக்கும் இணையத்தை விபிஎன்(VPN) அல்லாமல் பயன்படுத்தவேண்டாம். பொது இடங்களில் கிடைக்கும் இணையத்தை நாம் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி பயன்படுத்தும் பொழுது நம்முடைய பயன்பாடுகளை, அதே இணையத்தை பயன்படுத்தும் வேறு ஒருவர் எளிதாக கண்காணிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், பொது இணையத்தை பயன்படுத்தும் போது அதில் முக்கியமாக, வங்கி சம்பந்தமான பயன்பாடுகள்,முக்கியமான தகவல்கள் போன்றவற்றை பரிமாறும் பொழுது அது பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது.
OTP எச்சரிக்கைகள்
தற்பொழுது அதிகமாக நடைபெறும் வங்கி சம்பந்தமான சைபர் குற்றங்களை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதில் யாருடைய வங்கிக் கணக்கிற்கு குறி வைக்கப் பட்டுள்ளதோ அவரை நேரடியாக தொடர்பு கொள்ளும் ஹேக்கர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களுக்கு உடனடியாக ஒரு OTP அனுப்பப்படுவதாகவும், உடனே அதைத் தெரிவிக்குமாறும் கூறுகின்றார். உடனே வங்கியில் இருந்துதான் ஏதோ தகவலுக்காக கேட்பதாக எண்ணி நம்முடைய மொபைலுக்கு வந்த OTP-யை அவர்களிடம் சொல்லி விடுகின்றார்கள். உடனடியாக அந்த ஹேக்கர் குழுவானது கிடைத்த OTP-ஐ பயன்படுத்தி, இலட்சக்கணக்கில் கூட ஏமாற்றி விடுகின்றனர்.
இவையெல்லாம் அதிக அளவில் நடைபெறும் சைபர் குற்றங்கள் ஆகும். இவை மட்டுமல்லாது இன்னும் பல வழிமுறைகளில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது எல்லாம் தற்பொழுது அடிக்கடி நடக்கும் சாதாரண குற்றங்கள் போல் ஆகிவிட்டது. அதனால் பயன்பாட்டளர்கள் தான் முடிந்தவரையில் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுது, அதனை பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இது போன்று அடிக்கடி நடக்கும் குற்றங்களையும் அதிலிருந்து தப்பிக்கும் சரியான வழி முறையையும் Cyberlites உங்களுக்காக எழுதிக் கொண்டே இருக்கும்.