Whatsapp-ல் மீண்டும் ஒரு Scam! ஆபாச படத்தை வைத்து பணம்பறிக்கும் திருடர்கள்!

உலக அளவில் இன்றைய தேதிகளில் Scam என்று அழைக்கக்கூடிய இணையப் பயன்பாட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைய விஷயங்கள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றன.
அதிலும் நாம் தினசரி அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய, Whatsapp-ல் தற்போது ஒரு புதிய Scam ஆபத்து அதிக அளவில் பரவி இணையப் பயன்பாட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இது எப்படி சாத்தியம்?
அதாவது நாம் சாதரணமாக Whatsapp பயன்படுத்திக் கொண்டிருக்கும்பொழுது நமக்கு புதிய ஒரு மொபைல் எண்ணிலிருந்து ஒரு வீடியோ அழைப்பு வருகின்றது. நாம் அந்த அழைப்பை ஏற்றவுடன் மொபைலின் திரையில் நமக்கு ஆபாசமான ஒரு புகைப்படத்தை காண்பிக்கின்றது அந்த வீடியோ அழைப்பு. நாம் சற்று அதிர்ச்சியில் பார்க்க ஆரம்பித்த சில வினாடிகளில் அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்படுகின்றது.
நாம் ஏதோ ஒரு அழைப்பு மாறி வந்திருக்கலாம் அல்லது வேறு ஏதோ பிரச்சினையாகக் கூட இருக்கலாம் என எண்ணி அதை அப்படியே விட்டு விடுவோம். ஆனால், நாம் வீடியோ அழைப்பினை ஏற்கும் பொழுது நம்முடைய முகமும் மொபைலின் திரையில் பதிவாகின்றது என்பது இந்தத் திருடர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைகின்றது.
அதை இந்த அழைப்பிற்குப் பின்னால் இருக்கும் திருட்டு கும்பல் கிளிக் செய்து Screenshot செய்வதின் மூலம் நாம் ஏதோ ஒரு நிர்வாண அழைப்பு ஒன்றை நாம் பேசிக்கொண்டிருப்பதுபோல் சித்தரித்து விடுகின்றார்கள்.
பாதிப்பில் சிக்கும் சாதாரண மக்கள்!
அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களில் நமக்கு மீண்டும் ஒரு சாதரணமாகவோ அல்லது Whatsapp மூலமாகவோ புதிதாய் ஓர் அழைப்பு வருகின்றது. நாம் அதை ஏற்று பேசினால் அவர்கள் கிளிக் செய்த புகைப்படத்தை நமக்கு அனுப்பி, இந்த படத்தினை பகிராமல் இருக்க பணம் கொடுக்குமாறு கேட்டு மிரட்ட ஆரம்பிக்கின்றார்கள்.
இணையப் பயன்பாட்டாளர்கள் சில பேர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அது மட்டும் இல்லாமல் வசமாய் மாட்டிக் கொண்டதாய் சிலபேர் நினைத்து செய்வது அறியாமல் தற்கொலைக்கு கூட முயல்கின்ற நிலைமை வரை இந்த செயல் அரங்கேருகின்றது
பணம் கொடுத்தால் கூட பரவாயில்லை, ஆனால் புகைப்படம் சமூக வலை தளங்களிலோ அல்லது மக்களிடத்திலோ பரவி விடக் கூடாதென எந்தத் தவறும் செய்யாத சாதாரண இணையப் பயன்பாட்டாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகின்றது.
இது தற்போது அதிக அளவில் பரவி வரக்கூடிய புது பிரச்சினை ஆகும். இது பற்றிய புகார்களும் காவல் துறையினரிடம் செல்ல ஆரம்பித்த பிறகு தற்போது Whatsapp-ல் ஏதேனும் புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அதை ஏற்க வேண்டாம் எனவும், அவ்வாறு ஏற்கும் சூழ்நிலையில், உங்களது முகத்தினை முழுமையாக காண்பிக்க வேண்டாம் என்று காவல்துறை செய்தி ஒன்றை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்கள்.
இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதுமே உங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பில் கவனம் கொண்டு உங்களது மொபைல் எண்ணை அனைவரிடத்திலும் பகிர வேண்டாம் என்றும், இணையப் பயன்பாடுகளில் அதிக கவனம் கொண்டு செயல்பட்டு, இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சைபர்லைட்ஸ் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.